அம்மாக்கள் நாள்

உலகிலே மிகவும் பாதுகாப்பானதும் வசதியானதுமான இடம் தாயின் அந்த இருண்ட கருவறைதான் என்பதில் எனக்கு மாற்றுக்கருத்து ஏதுமில்லை. எதற்குமே ஒப்பிடமுடியாத தாயின் கருவறையில் அந்த பத்து மாதங்களும் எவ்வளவு சுகமாக பாதுகாப்பாக தூங்கியிருப்பேன் அந்த சுகம் மீண்டும் வராதா என்று ஏங்கித்தவிக்கும் நாட்கள்தான் எத்தனை. சிறுவயது முதல் எவ்வளவு துன்பங்களை கொடுத்துக்கொண்டிருக்கின்றோம் ஆனால் இன்றுவரை எமக்காக தன்னையே உருக்கி விரதம் இருக்கும் அந்த அன்னையின் அன்பிற்கு இந்த உலகில் எந்த உறவு ஈடாகமுடியும். எவ்வளவு பொறுமை எவ்வளவு அடக்கம் எவ்வளவு அன்பு எதையும் தாங்கும் மனப்பாண்மை இவ்வாறு எழுத்தில் அடக்கமுடியாத எண்ணற்ற அன்புடையது அந்த தாயுள்ளம். இன்று அந்த அன்னைக்கு ஓர் அன்புத்தினம் பெறுதற்கரிய அந்த உறவை நேரடியாகவாழ்த்த முடியாத துர்ப்பக்கியசாலிகளுள் நானும் ஒருவன். அன்பென்றாலே அதன் மறுவடிவம் நீங்கள்தான் அம்மா........



கிரேக்கத்தில் முன்னோர்கள் தங்கள் தாய் கடவுளை வணங்கி விழா எடுத்தார்கள் இந்த விழா காலப்போக்கில் ரோமிற்கு பரவியது ரோமானியர்கள் தங்களுடைய தாய் கடவுளுக்கு ஒவ்வொரு வருடமும் மார்ச்15 தொடக்கம் மார்ச்18 வரை மூன்று நாட்கள் விழா எடுத்துக்கொண்டாடினார்கள் ஆனாலும் ரோமானியர்கள் அந்த நாட்களில் மற்றோனலியா (Matronalia) எனும் விழாவினை தங்களுடைய ஆதிக்கடவுளான ஜுனோ (Juno) எனும் கடவுளுக்காகவும் கொண்டாடினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது அவர்கள் அந்த நாட்களில் இந்த தினங்களில் தங்களுடைய அன்னையருக்கு பரிசு கொடுத்து மதிப்பளித்தார்கள் இதுவே பின்னர் நவீன அன்னையர் தினத்திற்கு வழிவகுத்தது.

உலகில் அன்னை இல்லாத குடும்பமே இல்லை அந்த தாயை இதயங்களில் இருத்தி மரியாதை செய்து வாழ்த்தும் நவீன அன்னையர் தினம் 1912ம் ஆண்டளவில் அன்ன ஜார்விஸ்(Anna Jarvis) என்பவரால் அறிமுகப்படுத்தப்பட்டது 20ம் நூற்றாண்டில் உருவாக்கப்பட்ட நவீன அன்னையர் தினம் கிறிஸ்தவ கலாச்சாரத்தை அடிப்படியாககொண்டது ஆனாலும் 16ம் நூற்றாண்டுகளில் கொண்டாடப்பட்ட ஞாயிறு அன்னை (Mothering Sunday) தினமே இன்று ஐக்கிய இராச்சியத்தில் கொண்டாடப்படும் அன்னையர் தினமாகும் ஐக்கிய அமெரிக்காவில் அன்னையர்தினம் ஒவ்வொரு வருடமும் மே மாதம் வருகின்ற இரண்டாவது ஞாயிற்றுக்கிழமைகளில் கொண்டாடப்படுகின்றது இது ஐக்கிய இராச்சியத்தில் கொண்டாடப்படும் ஞாயிறு அன்னையர் தினத்திற்கு ஒப்பானது அமெரிக்காவில் கொண்டாடப்படும் இந்த அன்னையர் தினத்தினை அடிப்படையாக கொண்டுதான் பலநாடுகள் தங்கள் அன்னையர் தினத்தை கொண்டாடுகின்றன (இந்த நாடுகள் எப்பதான் தங்கள் சுயபுத்தியில் இயங்கப்போகின்றார்களோ தெரியாது இவற்றில் பல தென்னாசிய நாடுகளாகும்) அன்ன ஜர்விசினால் 1912ல் உருவாக்கப்பட்ட அன்னையர் தினம் அமெரிக்காவின் முன்னாள் அதிபர் வூட்ரோ வில்சன் அவர்களால் Mother's day என பிரகடனப்படுத்தப்பட்டு சட்டரீதியாகவும் அங்கீகரிக்கப்பட்டது. வெவ்வேறு நாடுகள் வெவ்வேறு தினங்களில் அன்னையர் தினத்தினை கொண்டாடினாலும் அன்னையை மரியாதை செய்து வாழ்த்தி வணங்குவது சந்தோசமாக வரவேற்கத்தக்க விடயம்தான்.

நன்றி: தேவிவாசம்